அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு அன்பான வணக்கம். தமிழில் வாசிக்க , எழுத தடுமாறும் குழந்தைகள் மற்றும் எழுத்துகளை அறியாத குழந்தைகள் எவரும் இருக்கக் கூடாது என்ற எண்ணம் அனைத்து ஆசிரியப் பெருமக்களிடம் உள்ளது. அதற்கான அவர்களின் முன்னெடுப்புகள் முக்கியமானது. அவற்றில் இந்த தமிழ் விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளமும் தற்போது பங்கெடுத்துக் கொள்கிறது. தாய்த்தமிழை வளர்த்தெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை. அந்த வகையில் தமிழ்நாட்டு பள்ளிகளில் தமிழ் படிக்கத் தெரியாத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலையை எய்த வேண்டும். அதற்கு நாம் பல்வேறு விதமான முயற்சிகள் செய்து வருகிறோம். சென்ற மாதம் அனைத்து மாவட்டங்களிலும் இதற்கான சிறப்புக் கூட்டம் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையில் கூட்டங்கள் நடத்தப்பட்டு டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவரும் தமிழ் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என கூறினார்கள். அந்த வகையில் நமது கல்விவிதைகள் மற்றும் தமிழ்விதை வலைதளங்கள் இணைந்து வாரா வாரம் தமிழ் படிக்க எழுத தெரியாத மாணவர்களுக்கு எவ்விதமான செயல்பாடுகளை வழங்க வேண்டும் என்பதனை வாராந்திர பாடக் குறிப்பேடு எழுத தயார் செய்வது போல வாரச் செயல்பாடுகளை வழங்க உள்ளோம். நம் நோக்கம் இந்த ஒரு மாத காலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் படிக்க. வாசிக்க தெரிகிறது என்பதனை உறுதி செய்வதே.... அதற்கு உங்களின் ஒத்துழைப்பும் வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய செயல்பாடுகளையும் பகிர்ந்தால் நிச்சயம் அனைத்து மாணவர்களும் இதில் தேர்ச்சி அடைவர்.
இங்கு நமது வலைதளங்கள் மூலம் உருவாக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் யாவும் இரண்டு வகையான பயிற்சி நூல்களைப் பின்பற்றி அவற்றை முறைப்படுத்தி தொகுத்துள்ளோம். இனி வாரா வாரம் டிசம்பர் மாதம் வரை 8 வாரங்கள் மாணவர்களுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதனை வெளியிடுகிறோம் உங்களின் ஆதரவுடன்.
இங்கு அன்றாட செயல்பாடுகளை நமது வலைதளங்கள் எடுத்துக் கொண்ட பயிற்சி புத்தகங்கள் இரண்டு வகையான புத்தகம்.
1. எழுத்தே தெரியாத மாணவர்களுக்கான புத்தகம்.
2. எழுத்துக் கூட்டி வாசிக்க தடுமாறும் மாணவர்களுக்கான புத்தகம்.
என இரு தலைப்பில் அடிப்படையில் கீழ்க்கண்ட கட்டகங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
எழுத்துத் தெரியாத மாணவர்கள் - பயிற்சி நூல்
தமிழ் கற்றல் கையேடு - 16 பக்க நூல்
இந்த கற்றல் கையேடு திரு. ம. நடேசன், உலகத் தமிழர் கலை பண்பாட்டு நடுவம் ( கல்வி பொறுப்பாளர் ) அவர்களால் உருவாக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கக் கூடிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார்.அவர் அப்பணியில் ஒய்வு பெற்று 13 ஆண்டுகளாக தமிழின் பால் ஈடுபாட்டுடனும், தமிழை வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பும் கொண்டு 30 நாள்களில் செய்தித்தாள் படிக்க வைக்க இயலும் என்ற நிலைப்பாட்டை எட்ட அவர் உருவாக்கி இருக்கும் இந்த கையேட்டினை முறையாக உபயோக்கிக்கும் போது மாணவர்கள் நிச்சயம் தமிழில் சரளமாக படித்துவிடுவர். இந்த கையேட்டினை எவ்வாறு மாணவர்களும், ஆசிரியர்களும் உபயோகப்படுத்த வேண்டும் என்பதனையும் அவர் விளக்கியுள்ளார். அதனடிப்படையில் தமிழ் எழுத்து தெரியாத மாணவர்களுக்கு இந்த நூலை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். அவர் கூறிய வழிமுறைகளை தான் நாம் இங்கு எழுத்து வடிவமாக கொடுத்துள்ளோம். இவற்றை நீங்கள் தாங்கள் ஏற்கனவே எழுதிக் கொண்டிருக்கும் ஏட்டில் எழுதிக் கொள்ளும் போது அது அதிகாரிகளுக்கும், உங்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் இது கோப்பாக மாறிவிடும். இங்கு ஐயா அவர்கள் வழங்கியுள்ள கோப்புகளையும் காட்சிகளையும் உங்களுக்கு வழங்குகிறோம்.அவற்றைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளியுங்கள்.
மா.நடேசன் அவர்களின் கோப்புகளை பெற : CLICK HERE
புதியன புகுதல் என்ற அடிப்படையில் நீங்கள் உங்கள் பள்ளி மாணவர்களை எழுத்து தெரியாத மாணவர்கள் , எழுத்துக் கூட்டி படிக்கும் மாணவர்கள் என வகைப்படுத்தி பெயர்களை எழுதி அவர்களுக்கான பயிற்சிகளை தனியே புதியதாகக் கூட எழுதிக் கொள்ளுங்கள். இவை நமக்கு பிற்காலத்திலும் உதவக்கூடிய செயல்பாடுகள்.
எழுத்துக் கூட்டி வாசிக்க தடுமாறும் மாணவர்கள் - பயிற்சி நூல்
நாவில் தமிழ் நாளும் தமிழ் - சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை - கட்டகம்.
சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கட்டகமானது அனைவருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எழுத்து அறியா மாணவர்களுக்கு இதனை விட 16 பக்க தமிழ் கற்றல் கையேடு சிறப்பான ஒன்றாக உள்ளது. அதில் எழுத்துகளை அறிந்தப் பின் இந்த கட்டகத்தில் உள்ள பயிற்சிகளை அடுத்த ஒரு மாதத்தில் நன்கு வாசித்து விட முடியும். ஆகையால இந்த பயிற்சி நூலினை நாங்கள் எழுத்து அறிந்து கூட்டி வாசிக்க தடுமாறும் மாணவர்களுக்கான செயல்பாடுகளை எழுத எடுத்துக் கொண்டோம். இனி வரும் வாரங்கள் மாணவர்களுக்கு தேவையான செயல்பாடுகளை வழங்கி இந்த இரு மாத கால அளவுக்குள் அவர்களை நன்கு தமிழ் படிக்க, தெரிந்த மாணவர்களாக மாற்றி கல்வியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவோம். வாருங்கள்...
மேலும் மாணவர்களின் கற்றல் அடைவுகளை சோதனை செய்ய அவர்களுக்கு வார இறுதியில் மதிப்பீடுகளை தேர்வுகளாக வைத்து அவர்களின் அடைவுநிலையைக் குறித்துக் கொள்வோம். இரு வகையான மாணவர்களுக்கும் உரிய தேர்வுத்தாள்கள் மற்றும் அவர்களின் அடைவு நிலை ( முன்னேற்ற அறிக்கை ) படிவத்தை நமது வலைதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
குறிப்பு : மெல்லக் கற்கும் மாணவர்கள் என்ற வார்த்தை எங்கு பயன்படுத்தப்பட வில்லை என்பது நீங்கள் படிக்கும் போது உணர முடியும். ஏனெனில் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மெல்லக் கற்போர் என கூறாமல் அவர்களுக்கான தனி வகுப்பறை தொடங்கி அந்த வகுப்பறைக்கு தனி பெயரை வழங்க அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் இனிமையாக நடந்துக் கொள்ளும் பண்பு கொண்டவர்கள் ஆசிரியர்கள் என்பதனைக் கருத்தில்க் கொண்டு இனிய சொற்களால் அவற்றை கற்பிக்க அந்த வகுப்பறைக்கு ( அ ) அந்த மாணவர்களுக்கு நாங்கள் முன்னெடுத்த பெயர் கற்றல் இனிமை . இனி நாம் அந்த வகுப்பறைக்கு கற்றல் இனிமை வகுப்பறை மற்றும் கற்றல் இனிமை மாணவர்கள் என குறிப்பிட்டு கற்றலை இனிமையாக்குவோம்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை
கற்றல் இனிமை
வாராந்திர செயல்பாடுகளைப் பெற